சென்னை:நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானலில் கட்டி வரக்கூடிய வீட்டின் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுள்ள நிலையில் பாபி சிம்ஹா வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டிவரும் நிலையில், கட்டிட ஒப்பந்த தாரர்கள் தரமற்ற முறையில் வீட்டை கட்டி இருக்கிறார்கள். அரசியல் குடும்ப பின்புலம் கொண்ட நபரான உசேன் மூலம் அறிமுகமான கட்டிட ஒப்பந்ததாரர் ஜமீரிடம் நடிகர் பாபி சிம்ஹா 1 கோடியே 30 லட்சம் ரூபாயில் வீடு கட்டித்தர ஒப்பந்தமிட்ட நிலையில் உசேன் மற்றும் ஜமீர் பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டை முழுமையாக முடிக்காத நிலையில் கூடுதலாக 40 லட்சம் தரக்கோரி அழுத்தம் தந்துள்ளனர்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அரசியல் பின்புலம் இருப்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று வழக்குப்பதிவு செய்தோம். இதனால் கட்டுமான ஒப்பந்ததார்களை நடிகர் பாபி சிம்ஹா மிரட்டியதாக உசேன் மற்றும் ஜமீர் அளித்த பொய் புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாங்கள் புகார் கொடுக்கும் போது காலம் தாழ்த்திய காவல் துறை நீதிமன்றம் சென்று வழக்குதொடுத்த நிலையில் 10 நாள்கள் கழித்து கொடுத்த புகாரை உடனடியாக ஏற்றுக்கொண்டனர்.