2019-2022ஆம் ஆண்டுகளுக்கான, நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றுமுடிந்தது. இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல்வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அலுவலர்கள் பொறுப்பில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடமிருந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி கல்யாண சுந்தரம் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்குகள் இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்கு தடை கோரியும் தேர்தலை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.