சென்னை:நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர். தமிழில் நன்றி படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 90களில் மிகவும் பிஸியான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
கதாநாயகனாகத் திரையுலகைக் கலக்கியது மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். சமீப காலமாக வில்லன் வேடங்களில் கதாநாயகர்களின் வருகை அதிகரித்து வெற்றி கண்டு வரும் நிலையில், அர்ஜுன் வில்லன் வேடங்களில் நடித்து வருவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு போதிய வாய்ப்புகள் வரவில்லை.
இந்த நிலையில் இவரும், தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது. உமாபதி தமிழில் ஒரு கூட முத்தம், தண்ணி வண்டி, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்கள் பெருமளவில் வெற்றி பெறாத காரணத்தால், திரையுலகில் இன்னும் தனக்கான இடத்தை தேடி வருகிறார்.