தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Thunivu: 'ரசிகர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தை நடிகர்கள் பார்ப்பார்களா?': உயிரிழந்த ரசிகரின் சித்தி - Actor Ajith fan dies falling into container truck

Thunivu: திரையில் தோன்றும் கதாநாயகர்களை விட நிஜ வாழ்வில் இருக்கும் பெற்றோர் என்ற ஹீரோக்களை ரசிகர்கள் அதிகம் நேசிக்க வேண்டும் என துணிவு ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது லாரியில் இருந்து தவறி விழுந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

பரத்குமார்
பரத்குமார்

By

Published : Jan 11, 2023, 4:14 PM IST

Updated : Jan 11, 2023, 4:40 PM IST

பெற்றோர்கள் தான் முதல் ஹீரோ - பரத்குமாரின் சித்தி

Thunivu: சென்னை: சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்தவர், பரத்குமார். வயது19. பழைய மகாபலிபுரம் கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் பரத் குமார் குடும்ப வறுமை காரணமாக பகுதி நேரமாக கூலி வேலைக்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், தாய் மற்றும் பரத் குமார் ஆகியோர் கூலிவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தனர். தீவிர அஜித் ரசிகரான பரத் குமார், துணிவு படம் வெளியாவதற்கு முன் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து ரசிகர்களிடம் பாராட்டி வந்துள்ளார். மேலும் பட ரிலீஸ் அன்று நண்பர்களுடன் சென்று படத்தைக் காண திட்டுமிட்டுள்ளார்.

நடிகர் அஜித்தின் துணிவு படம் இன்று(ஜன.11) வெளியான நிலையில், பிளாக்கில் 550 ரூபாய் கொடுத்து கோயம்பேடு பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் பெற்றுள்ளார். நள்ளிரவில் தியேட்டர் முன் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து பரத் குமாரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரசிகரிகளின் கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சாலையின் இருபுறத்திலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து சென்ற கன்டெய்னர் லாரி மீது ஏறி ஆட்டம் போட்ட பரத் குமார், திடீரென லாரி வேகமெடுக்க தவறி கீழே விழுந்தார்.

லாரியில் உள்ள கம்பி, பரத் குமாரின் முதுகு தண்டுவடத்தில் இடித்து பலத்த காயத்துடன், சாலையில் துடிதுடித்தார். அருகில் இருந்தவர்கள் பரத் குமாரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பரத் குமார், அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பரத் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். மேலும் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பரத் குமாரின் சித்தி ஆரோக்கியம் கூறுகையில், வேலைக்கு சென்று சம்பாதித்த 1,000 ரூபாய் பணத்தை வைத்து துணிவு படத்திற்கு டிக்கெட் எடுக்க சென்ற போது, லாரியில் இருந்து விழுந்து உயிரிழந்து விட்டதாக போலீசார் தங்களிடம் தெரிவித்தது பேரதிர்ச்சியாக இருந்ததாகவும், வேதனை அளித்ததாகவும் தெரிவித்தார்.

ரசிகர்கள் நடிகர்களை தீவிரமாக நேசிக்கலாம், ஆனால், அவர்களுக்கு மேல் பெற்றோர்களை நேசிக்க வேண்டும் என்றும்; அவர்களை தவிர, பெரிய ஹீரோ யாரும் இல்லை என்றும் கூறினார். பிடித்த நடிகர்களுக்காக பாலாபிஷேகம் செய்வது, கட் அவுட் வைப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என நடிகர்கள் ரசிகர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும்; தொடர்ச்சியாக இது போன்ற மரணம் நிகழ்ந்து வருவது வேதனையளிப்பதாகவும், ரசிகர் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தை அஜித், விஜய் பார்ப்பார்களா எனவும் உயிரிழந்த பரத் குமாரின் சித்தி ஆரோக்கியம் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:Thunivu: 6 மாத தாடி; அஜித் கெட்டப்பில் வந்த ரசிகர்!

Last Updated : Jan 11, 2023, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details