சமூக சேவகர் கொலை வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு - killed, case
சென்னை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் தணிகாச்சலம். சமூக சேவகரான இவர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், 2014 நவம்பர் 11ஆம் தேதி அவரை அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தணிக்காசலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆம்பூர் காவல்துறையினர் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் வெங்கடேசன் என்பவருக்கு எதிராக மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஏழு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை காப்பாற்றும் நோக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபப்ட்டுள்ளதாகவும், முறையான விசாரணையை காவல்துறை மேற்கொள்ளவில்லை என்று கூறிய சுப்பிரமணியன், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.