தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 23, 2022, 4:54 PM IST

சென்னை:தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயணிப்போருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் பயணிப்பதாகவும், ஆனால் நகரப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்வோரில் 10 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல் துறையினர் பலர் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுவது இல்லை எனத் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வரும் போலீசாரின் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து வைக்க வேண்டும் எனவும், அவர்கள் ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டு வந்து காண்பித்த பின்னரே வாகனங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் டிஜிபி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவ்வாறு செயல்படும் போலீசார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதிக்க வேண்டும் எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும், போலீஸ் என்ற அடையாளத்தை காரணமாகக் கூறி வாக்குவாதம் செய்யும் போலீசார் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தங்கள் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details