சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள தகவலில், குறுகிய மற்றும் மத்திய கால கடனமைப்பில், மாநில அளவில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியும், மாவட்ட அளவில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், கிராம அளவில் 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடனை வழங்க கூட்டுறவு சங்கங்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. விவசாயிகள் விதைகளை வாங்கவோ, விவசாயத்திற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வளம் உள்ளிட்ட அனைத்தின் தேவைகளுக்காகவும் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக் கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த 2006-07ஆம் ஆண்டு முதல் பயிர்க்கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம் வட்டி இழப்பைத் தமிழக அரசு வட்டி மானியமாகக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம் ஆண்டு முதல் உரிய காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டிச் சுமையினை அரசே ஏற்றுக்கொள்ளும் என ஆணையிடப்பட்டு, விவசாயிகளுக்குத் தொடர்ந்து வட்டியில்லா பயிர்க்கடனும் வழங்கப்பட்டு வருகிறது.