சென்னை:உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா அழைப்பு 104 மையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 9) தொடங்கி வைத்தார்.
போர் பதற்ற சூழல்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் இருந்து உக்ரைன் சென்று படித்த மாணவர்கள் அங்கு இருக்கும் போர் பதற்ற சூழல் காரணமாக திரும்பி வந்துள்ளனர். இதுவரை 1,456 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் மீண்டும் உடனடியாக உக்ரைன் செல்வது என்பது நிகழாத காரியம்.
மற்றொரு புதிய திட்டம்
எனவே, அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உதவிட வேண்டும் என்ற கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மனநல ஆலோசனை என்பது தேவைப்படுகிறது. சுகாதாரத்துறைக்கு மற்றொரு புதிய திட்டத்திற்கான ஆலோசனை ஒன்றை நடத்தி இருக்கிறோம். சுகாதார உரிமைக்கான சட்ட முன்வடிவு புதியதாக தயாரிக்க ஆலோசனை நடைபெற்றது.
முதல் முறையாக சுகாதார உரிமைக்கான சட்டம்
அனைத்து தரப்பினருக்கும் தேவையான சுகாதார கட்டமைப்பு, அவர்களை காப்பாற்றுவது இதுதான் இதன் நோக்கம். தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது. அசாமில் இந்த திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. நடப்பு பட்ஜெட்டில் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்வது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலாேசிக்கப்படும். இந்தியாவில் முதல் முறையாக சுகாதார உரிமைக்கான சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அச்சத்தில் ஆசிரியர்கள்... தேசிய வரைவு உயர்கல்வித்தகுதிகள் திட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை