சென்னை:தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கரோனா தொற்று தற்போது உலக நாடுகளில் ‘பி.எப்.7’ எனும் அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குனர் சாந்திமலர் அனுப்பி உள்ள கடிதத்தில், 'கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு தேவையான கரோனா பரிசோதனை கருவிகளை வாங்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான N95 முகக்கவசம் மற்றும் முழு உடல் கவசம் ஆகியவற்றை மருத்துவமனைகள் தயாராக வைத்திருக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள், பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் படிக்கக்கூடிய மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
மருத்துவ கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும், நோயாளிகளின் உறவினர்கள் கூட்டமாக கூடுவதையும் தடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு, தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும். கரோனா வார்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகளின் இருப்பு சரி பார்க்கப்பட வேண்டும்.நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், கொரோனா பரிசோதனை செய்யும் நபர்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:IOB மீதான அபராதத்திற்கு 45 நாள் மேல்முறையீடு செய்ய அவகாசம்: உயர் நீதிமன்றம்