இது தொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் கரோனா வைரசால் உயிரிழப்புகளை பார்த்த பிறகு இந்திய அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுத்ததாக தெரியவில்லை.
ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து உணவு கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. பயணம் செய்ததன் விளைவாக, தொற்றுநோயை தங்கள் கிராமத்துக்கு கொண்டு சென்று பரப்புகிற மிக கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆனால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சாவகாசமாக எந்த சலனமும் இல்லாமல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரைப் பார்த்து களிப்படைகிறார்.
தமிழ்நாட்டை பொருத்தவரையில் ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதனை முதலமைச்சர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுக்கும் தமிழ்நாடு முதலமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன். கரோனாவை எதிர்கொள்ள கேரள அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது.