சென்னை:தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், “நாளை (பிப்.14) காதலர் தினத்தை முன்னிட்டு சமூக விரோதிகள் சிலர் காதலர்களை தாக்குவது, காதலுக்கு எதிராக சமூகவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவுள்ளனர். இதனைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் முன்கூட்டியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, “நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதல் என்பது உள்ளத்தோடு தொடர்புடையது, சாதிக்கும், மதத்திற்கும், நாட்டிற்கும், இனத்திற்கும், மொழிக்கும், பாலினத்திற்கும், அப்பாற்பட்டது. ஆனால், சில சமூக விரோதிகள் காதலை சாதி, மதத்துடன் ஒப்பிட்டு, சாதி கலவரத்தையும், மதக்கலவரத்தையும் ஏற்படக் கூடும் வகையில் காதலர் தினத்தன்று சிலர் சமூக செயலில் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
கட்டாயத் திருமணம் செய்து வைப்பது, பொது இடத்தில் உள்ள காதலர்களை தாக்குவது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். காதல் என்பதை இவர்கள் தவறாக புரிந்துள்ளனர். காதல் தான் மனிநேயத்தின் மாமருந்து, சமத்துவத்தின் அடையாளம், வாலண்டைன்ஸ் டே என ஒரு பாதிரியார் பெயரில் காதலர் தினம் கொண்டாடுவதால், மதத்துடன் பொருத்திப்பார்த்து, இது கிறிஸ்தவ நிகழ்வு; அதனால் இது கலாசாரத்திற்கு எதிரானது என சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.