சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மீதான 97 பக்க ஊழல் குற்றச்சாட்டு புகார் மனுவை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக கொடுத்தது. இதைத்தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் கூட்டாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகார் மனுக்களை கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஆதாரங்களுடன் ஊழல் குற்றச்சாட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 1995ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மீது கருணாநிதி ஊழல் புகார்களை ஆளுநரிடம் அளித்தார். அந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.