தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. டிஜிபி எச்சரிக்கை.. - பொய் வதந்தி

தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்தி பரப்பியவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 4, 2023, 3:59 PM IST

சென்னை: புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவின் கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(iixb) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 55(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல, தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல் துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வட மாநில நபர்கள் தமிழ்நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதாக கூறப்படும் செய்திகள் தவறானது, அவர்கள் ஹோலி பண்டிகைக்குச் சொந்த ஊருக்கு செல்வதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக ‘கோவையில் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

வதந்தியாக பரப்பப்படும் வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம்’ என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். வதந்திகளை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில் காவல் துறையினர் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'கோவையில் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்' - கலெக்டர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details