சென்னை: தமிழ்நாடு அரசு விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு லாபகரமாக விலை கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் வரத்து அதிகரிப்பால், ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இத்தருணங்களில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல், உளுந்து, பாசிப்பயிறு, கொப்பரை போன்ற விளைபொருட்களை அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது. தமிழ்நாட்டில் 4.39 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. தென்னை விவசாயிகள் இளநீர், தேங்காய் மட்டுமல்லாமல், தேங்காய்களை உலரவைத்து மதிப்புக்கூட்டி கொப்பரைகளாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வெளிமார்க்கெட்டில் தேங்காய் கொப்பரைகளின் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்திருந்தது. ஆகையால் தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரைகளை நேரடியாக கொள்முதல் செய்ய உரிய கருத்துருவினை ஒன்றிய அரசுக்கு அனுப்பி, தமிழ்நாடு அரசு ஒப்புதல் பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
'தமிழ்நாட்டில் தென்னை அதிகம் சாகுபடி செய்யப்படும் 21 மாவட்டங்களில் உள்ள 42 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம், 50 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையாகவும், 1,000 மெட்ரிக் டன் பந்துக் கொப்பரையாகவும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின்கீழ் பந்துக் கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ.110, அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.105.90-க்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை விவசாயிகள், தங்களுக்கு அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி நிலச் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் நகல்களுடன் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் கொள்முதலுக்காக கொண்டுவரும் கொப்பரை, நாஃபெட் நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் இருத்தல் அவசியமாகும்.
தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் இத்திட்டத்திற்கு மாநில முகமையாக செயல்படுகின்றது. சேமிப்புக் கிடங்குகளில் கொப்பரைக் குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள், விவசாயிகள் வழங்கிய கொப்பரைக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்’
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தாது மணல் கொள்ளையை விசாரிக்க ஆணையம் - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்