சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குள்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், ”சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அனைவரும் முகக்கவசங்களை அணிவதோடு, தகுந்த இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்து அரசு வழங்கியுள்ள நடைமுறைகளை கடைபிடித்தால், தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும்” எனக் கூறினார்.
தொடர்ந்து, “மக்களின் பாதுகப்பை உறுதி செய்ய காவல்துறையினர் அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது. சென்னையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 12 ஆயிரம் காவல் துறையினருக்கு தடுப்பூசிகளை செலுத்த ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கின்போது காவல் துறையினர் சார்பில் சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்தார்.