கரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பெருந்தொற்று நேரத்தில், கல்விக் கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மத்திய - மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இருந்த போதிலும், சில தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்க கூடிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அடைக்கல அன்னை சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "அரசுப் பள்ளிகள் போல, தனியார் பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும். ஏற்கனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்துள்ள நிலையில், மாணவர்களுடைய தொடர் கல்விக்கு வழி வகுக்கும் வகையில் கல்விக் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும். மற்ற துறைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது போல, இந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் அரசிடம் கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் என்றும், அரசு அது தொடர்பாக பரிசீலித்து ஜூலை எட்டாம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.