தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நான் முழு திருப்தியுடன் பணி ஓய்வு பெறுகிறேன்’ - சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா! - சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பணி ஓய்வு பெறும் நிலையில், தான் முழு திருப்தியுடன் பணி ஓய்வு பெறுவதாக கூறினார். மேலும், இளம் வழக்கறிஞர்கள் ஆங்கில திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 24, 2023, 5:46 PM IST

சென்னை: உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, இன்றுடன் (மே 24) பணி ஓய்வு பெற்றார். அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜாவுக்கு பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், “13 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெறும் நீதிபதி ராஜா, 2009 ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றபோது அவரது சொந்த ஊரான தென்னூரில் பண்டைத் தமிழ் பொக்கிஷங்களாக தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது சொந்த கிராமத்தில் எந்த கடையிலும் சிகரெட், மதுபானம் விற்கப்படுவதில்லை” என புகழ்ந்து பேசினார்.

பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, “14 ஆண்டுகள் பணி முழுமையாக, திருப்தியாக அமைந்துள்ளது. பணியில் சேர்ந்தால் ஒருநாள் ஓய்வும் வரும், அதுவும் பணி நிபந்தனை தான்” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “மதுரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் விவசாயிக்கு மகனாக பிறந்து, நீதிபதியாக, பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றியது உண்மையில் திருப்தியான வாழ்க்கையாக அமைந்துள்ளது” என மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், “உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பயிற்சிபெற ஆங்கில திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெற்றிகரமான வழக்கறிஞராக முடியாது” என இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை கூறினார். நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்க வேண்டும், அதிகம் படிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் வானமே எல்லை எனவும் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வுபெற்ற பின், மூத்த நீதிபதி ராஜா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் மாதம் முதல் எட்டு மாத காலத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி ராஜா, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது, கூட்டுறவு சங்கங்களுக்கு ஆறு மாதங்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டது, கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அனுமதியளித்தது, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

சொந்த மாநிலத்தில் நீண்டகாலம் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்ததுடன், 13 கூடுதல் நீதிபதிகளுக்கும், ஐந்து நிரந்தர நீதிபதிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். மதுரை மாவட்டம், தென்னூர் கிராமத்தில் பிறந்த இவர், 2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யக் கூறி, உச்ச நீதிமன்றம் இரு முறை பரிந்துரைத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தனது பணியை நிறைவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க:வட மாநில குழந்தை தொழிலாளர்களை குடோனில் அடைத்து சித்தரவதை செய்த இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details