சென்னை:தாம்பரம் காவல் ஆணையர் ரவி, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு சமூக விரோதச் செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சுமுகமான முறையில் நடத்திடவும் தலைமறைவு குற்றவாளிகளைக் கண்காணித்து கைது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்பேரில் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தொடர் கண்காணிப்பிலும், ரவுடிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நடராஜன் என்கிற பாம் நடராஜன்(24) என்பவர் பெரும்பாக்கம் எழில் நகர்ப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.