சென்னை: கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று, எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகம் அருகில் முட்புதர் நிறைந்த பகுதியில், அடையாளம் தெரியாத ஆணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதனைக் கண்ட அப்பகுதிக்கு அருகிலுள்ள தங்கும் விடுதி மேலாளர் பீர் முகமது காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் எழும்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை ஆய்வு செய்தார்.
பின்னர் தடயவியல்துறை உதவி இயக்குநர் சோபியாவும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டார்.
அதிர்ச்சித் தகவல்
இதையடுத்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலத்தை உடற்கூராய்விற்காக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்விற்குப் பிறகு, அவர் யார் என அடையாளம் தெரியாததால், அவரது உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.
இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக தகவலளித்த தங்கும் விடுதி மேலாளர் பீர் முகமதுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்ததால், அவர் மீது காவலர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து தங்கும் விடுதி ஊழியர்களிடம் தனித்தனியே காவல் துறையினர் விசாணை நடத்தினர். இதில், ரூம் பாயாக வேலை செய்து வரும் அயனாவரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மீதும், காவல் துறையினருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. அப்போது அவரிடம் காவல் துறையினர், தங்களது கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
அதாவது சிபிசிஐடி அலுவலகம் அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண், தங்கும் விடுதியில் குளிப்பதற்காக அறை எடுத்துத் தங்கி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும், அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது யாருக்கும் தெரியக்கூடாது என்பதனால், விடுதியின் மேலாளர் பீர் முகமது, ரூம் பாய் ரவி ஆகியோர் இறந்தவரின் உடலை விடுதியில் மாடியில் இருந்து முட்புதருக்குள் தூக்கி வீசியதும் காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
தூக்கி வீசப்பட்ட உடல்
தொடர் விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர், ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45) என்பது தெரியவந்தது. இவர் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி காலை, குளித்து விட்டு ஓய்வு எடுப்பதற்காக விடுதியில் அறைகேட்டுள்ளார். அவரிடம் சரியான அடையாள அட்டை இல்லை என்றாலும், அவருக்கு தங்கும் விடுதி அறை (எண் 111) கொடுத்துள்ளது.
அறை எடுத்து தங்கிய ராஜ்குமார், அன்று முழுவதும் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த விடுதி மேலாளர் பீர் முகமது, ரூம் பாய் ரவி ஆகியோர் மறுநாள் (அக்டோபர் 4) காலை அறைக் கதவைத் தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது ராஜ்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் காவல் துறைக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல், நான்காம் தேதி இரவு, ராஜ்குமாரின் உடலை, விடுதியின் மாடியிலிருந்து, அருகிலுள்ள முட்புதரில் வீசியுள்ளனர். மேலும் அவர் தூக்கிட்டுக்கொண்ட கயிறு மற்றும் அவர் அணிந்திருந்த செருப்பு ஆகியவற்றையும் மறைத்து வைத்துள்ளனர்.