சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நான்கு மாதங்களுக்குள் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள் கொள்ளைபோயுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதற்கே அச்சப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்களைத் தடுக்க தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் கார்த்திகேயன்(36). இவர் தனது குடும்பத்துடன் டிசம்பர் மாதம் சபரிமலைக்குச் சென்றுவிட்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதக் கண்ட அவர் அதிர்ச்சியில் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருள்கள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பார்த்தபோது அதில் கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றியபோது மட்டுமே முகமூடி அணிந்திருந்ததும், வீட்டுக்குள்ளே வரும்போது முகமூடி அணியாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில், மன்னார்(எ) எழிலரசன்தான் கொள்ளையன் என்பதை காவல் துறையினர் அறிந்தனர். மேலும், அந்தக் கொள்ளையன் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் தாம்பரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும், பலமுறை திருட்டு வழக்குகளில் சிறைக்குச் சென்று திரும்பியதும் விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையனைப் பிடிக்க சேலையூர் துணை காவல் ஆணையர் தேவராஜின் உத்தரவின் பேரில் பீர்க்கன்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்து கொள்ளையனைத் தேடி வந்தனர். பின்பு, கொள்ளையனின் விலாசத்தைக் கண்டறிந்து அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், கொள்ளையனின் செல்ஃபோன் எண் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது.
செல்ஃபோன் எண்ணை வைத்து டிரேஸ் செய்த காவல் துறையினர், புதுச்சேரி மாநிலத்திற்கு விரைந்தனர். ஆனால், கொள்ளையனின் செல்ஃபோன் எண் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்ததால் அவரைப் பிடிப்பதில் காவல் துறையினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், ஏழு நாள்களுக்குப் பிறகு அவரது செல்ஃபோன் எண் பெங்களூரில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதனையடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்தனர். ஆனால், அங்கேயும் அவரை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர், காவல் துறையினரின் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது, சுமார் 70 நாள்களுக்குப் பிறகு கொள்ளையனின் செல்ஃபோன் சிக்னல் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் காட்டியுள்ளது. இம்முறை கொள்ளையனைப் பிடிக்க காவல் துறையினர் மாறுவேடத்தில் சென்றுள்ளனர். அங்கு பேருந்தில் செல்வதற்காக நின்றுகொண்டிருந்த அவரை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், காவல் துறையினரின் பாணியில் மன்னாரை விசாரணை செய்ததில் கொள்ளையடித்த நகைகள் உத்திரமேரூரில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. கொள்ளையனை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு தனிப்படை விரைந்தது. அங்கு சென்ற காவல் துறையினர், 30 லட்சத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கொள்ளையனின் வீட்டைப் பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.