சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளும் அறப்போர் இயக்கம் அளித்த புகார் அவர் மீதான ரெய்டுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மீது சொத்து குவிப்பு புகார்
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி அந்தப் புகாரில், "அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அவர் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வணிக வரித்துறை அமைச்சராக இருந்தார். அதன் முன் 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தார்.
2011ஆம் ஆண்டில் கே.சி.வீரமணி அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள நிகர சொத்து மதிப்பு 7.48 கோடி ரூபாய் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் 2011ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவரும், அவரது குடும்பத்தாரும் வாங்கியுள்ள சொத்தின் மதிப்பு 91.2 கோடி ரூபாயாகும்.
2011ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவர் வாங்கிய கடன்களைக் கழித்தால், அவர் சேர்த்த நிகர சொத்து 83.65 கோடி ரூபாயாகும். இந்த 10 ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமிப்பு செய்தது அதிகபட்சமாக ஏழு கோடி ரூபாய். எனவே அவர் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து 76.65 கோடி ரூபாயாகும்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன் பெயரில் உள்ள அசையும் சொத்துக்கள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 43 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும் அவர் பெயரிலும் அவரது குடும்பத்தார் பெயரிலும் பல அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. பெங்களுரு, சென்னை, திருப்பத்தூர் போன்ற பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்துக்களை கே.சி.வீரமணி வாங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஓசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு வெறும் 1 ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 100 ரூபாய்க்கு 0.1 ஏக்கர் நிலம் அமைச்சரின் நிறுவனமான ’ஹோம் டிசைன்ஸ் இன் பேப்ரிகேட்டர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் 15 கோடி ரூபாய் செலவில் உணவகம் கட்டப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் முன்னாள் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் 2011ஆம் ஆண்டு வெறும் 7.48 கோடி ரூபாய் சொத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த பட்சமாக 76.65 கோடி ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்தை சட்ட விரோதமாகக் குவித்துள்ளனர். இதை சரியாக விசாரித்தால் மேலும் பல கோடி ரூபாய் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மீது சொத்துக் குவிப்பு புகார் தொடர்ந்து, "பெரும்பாலும் இவை அப்போதைய அரசு நிர்ணயித்த மதிப்பைவிட மிகக் குறைவாக காட்டப்பட்டுள்ளது. இவரே பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்து இவர் துறையிலேயே அலுவலர்களுடன் சேர்ந்து விலையைக் குறைத்து மதிப்பீடு செய்து மோசடி செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எனவே விசாரணையில் இவர் உண்மையான வாங்கிய விலையை கணக்கீடு செய்தால் இங்கு சொல்லப்பட்ட தொகையை விட அது பல கோடி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அது அனைத்தையும் வஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையின்பொழுது கணக்கிட வேண்டும்" எனவும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:என்னைச் சந்திக்க வரவேண்டாம், அதுவே எனக்குப் பிறந்தநாள் பரிசு - சசிகலா