சென்னை:கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ராஜசேகரன் என்பவர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
மேலும், குற்றவியல் நீதிபதி லட்சுமி தலைமையில் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் கொடுங்கையூர் எவரடி காலனி மூன்றாவது தெருவில் உள்ள காவல் பூத்தில் நீதிபதி லட்சுமி விசாரணை மேற்கொண்டார். அதன்பின் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மரணம் தொடர்பான காவலர்கள் மற்றும் உயிரிழந்த ராஜசேகரனின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஜார்ஜ் மில்லரின் அத்துமீறல்கள்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முதல் முறை அல்ல என்பது தெரியவந்துள்ளது. விசாரணைக்காக வரும் நபர்களிடம் சட்டவிரோதமாக கடுமையாக நடந்துகொள்வது ஏற்கெனவே பலமுறை நடந்தது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு பெண் ஒருவர் மாயமான விவகாரத்தில் காவல் துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்பட மூன்று காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று 2013ஆம் ஆண்டு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு அழைத்து வந்த நபரிடம் விதிகளை மீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஜார்ஜ் மில்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் கடந்து 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.