சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தில் பேசிய கணக்கு குழுத் தலைவர் தனசேகரன், “சென்னை மாநகராட்சியில் ஏழை மக்களுக்கு தினசரி 20 லிட்டர் மினரல் குடிநீர் வழங்க வேண்டும் என்று, அதிமுக ஆட்சியில் ‘அம்மா குடிநீர் ஆலைகள்’ தொடங்கப்பட்டன.
ஆனால் அதன் நோக்கம் மாறி ஏழை மக்களுக்குப் பதிலாக, அம்மா குடிநீர் ஆலைகளில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வணிகர்கள் அதனை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். சென்னை முழுவதும் ஒரே ஒப்பந்ததாரர் கடந்த பத்து ஆண்டுகளாக ஆலைகளை பராமரித்து வருவதும், மாநகராட்சி சார்பில் முறையாக ஆலைகளை கண்காணிக்காமல் உள்ளதும் இதற்கு காரணமாக உள்ளது.
மேலும், பொதுமக்களிடம் பயன்பாடு குறைவாக உள்ள அம்மா குடிநீர் ஆலைகளை குடிசைப் பகுதிகளுக்கு அருகில் இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது மூடிவிட வேண்டும். ஆலைகளை பராமரிக்க புது ஆன்லைன் டெண்டர் விடப்பட வேண்டும். பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை முறைப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “சென்னை முழுவதும் தற்போது 52 அம்மா குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டு ஒன்றுக்கு இதற்கு ஆகும் செலவு மிக குறைவே. வரும் காலங்களில் அம்மா குடிநீர் ஆலைகளால் கூடுதல் செலவு ஏற்பட்டால் நடைமுறைகளை மாற்றலாம். பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க கால நீட்டிப்பு