சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று (ஏப்ரல்.16) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (ஏப்ரல்.17) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல்.18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.