சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வளைவில் பேருந்து அதிவேகமாக வந்ததால் கட்டுப்பட்டை இழந்து வளைவுப்பகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட வழிகாட்டும் பெயர்ப்பலகையான ராட்சத தூண் மீது மோதியது.
இதில் ராட்சத தூண் உடைந்து சாலையின் இருபக்கமும் விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் மீதும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற வேன் மீதும் விழுந்தது. பேருந்தின் முன் பக்க கண்ணாடிகள் உடைந்ததில் பஸ்சில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தை (30) ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மற்றொரு இளைஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மேலும் லேசான காயம் அடைந்த 3 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
சாலையின் இருபக்கமும் பெயர்ப்பலகை தூண் விழுந்ததால் கிண்டியில் இருந்து கத்திப்பாரா வரையிலும் கத்திப்பாராவில் இருந்து பழைய மீனம்பாக்கம் வரையிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.