இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த எம். செல்வம் என்பவரை நியமனம்செய்திருக்கிறார் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித்.
பேராசிரியர் செல்வம் துணைவேந்தராக நியமனம்செய்யப்பட்டதில் முறையான கல்விப் புலமையும் ஆராய்ச்சியறிவும் பின்பற்றப்படவில்லை. மேலும் தகுதிவாய்ந்த போட்டியாளர்களைப் புறக்கணித்து முறைகேடாக அவர் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பிற்குப் பல்வேறு பேராசிரியர்கள் விண்ணப்பித்த போதிலும் இறுதியாக ஐந்து பேரை மட்டும் தேர்வுசெய்து கொடுத்தது துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆளுநரால் அமைக்கப்பட்ட குழு.
இறுதியாக அழைக்கப்பட்ட ஐவரில் பேராசிரியர் முனைவர் தாஜூதீன் என்பவர் தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தாவர நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். கல்விப்புலமையிலும் ஆராய்ச்சிப் பங்களிப்பிலும் தகுந்த தகுதியைப் பெற்றுள்ளார்.
தற்போது நியமிக்கப்பட்ட பேராசிரியர் செல்வம் என்பவரைக் காட்டிலும் உயர்தர ஆராய்ச்சி இதழ்களில் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி பார்வையாளர்களிடமிருந்து அதற்கான அங்கீகாரக் குறியீடுகளையும் அதிகமாகப் பெற்றுள்ளார். மற்ற நால்வரைக் காட்டிலும் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவராகத் தனது கல்விப் பங்களிப்பைச் செய்துள்ளார்.
ஆனால் சிறுபான்மையினருக்குக் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எப்போதாவதுதான் கிட்டும் இந்த அரியவாய்ப்பைப் பறிக்கும்விதமாகத் தமிழ்நாடு ஆளுநர், பேராசிரியர் முனைவர் தாஜூதீனை துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்காமல் வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமனம்செய்திருக்கிறார்.
பன்வாரிலால் புரோகித் முற்றிலும் பாரபட்சத்துடன் நடந்து சிறுபான்மை மக்கள் மீதான தனது குரோதத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் நடந்துகொண்டிருக்கிறார். இல்லையெனில் உலகின் தலைசிறந்த நுண்ணுயிரியலாளராக விளங்கும் பேராசிரியர் தாஜூதீனே துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பார்.
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் ஒரு இஸ்லாமியர்கூட தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கல்வி உயர் பணி வாய்ப்புகளில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுவது முற்றிலும் வேதனைக்குரியது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள பேராசிரியர் தாஜூதீனை நியமனம்செய்ய கோருகின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.