சென்னை: கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஜோபின் ஜோஸ் (27). இவர் மீது ஆலப்புழா காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீசார் இவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேடினர். ஆனால் ஜோபின் ஜோஸ் வெளிநாட்டுக்குத் தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஜோபின் ஜோஸ்சை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி. போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று துபாயிலிருந்து ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து, பயணிகளை அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
இந்த விமானத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் ஜோபின் ஜோசும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தனர்.அதையடுத்து ஜோபின் ஜோஸ்சை வெளியில் விடாமல் மடக்கிப் பிடித்து, குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர்.
அதோடு கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதன் பின்பு கேரளாவிலிருந்து தனிப்படை போலீசார், ஜோபின் ஜோசை கைது செய்து கேரளா அழைத்துச் செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.