சென்னை:வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய வழக்குகளில் ஓராண்டாகத் தேடப்பட்டு வந்த மதுரை மாவட்ட தலைமறைவு குற்றவாளி அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 29). கடந்த 2022 ஆம் ஆண்டு செல்வகுமார் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதை அடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், செல்வக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, இவரைத் தொடர்ந்து தேடி வந்தனர்.
ஆனால் இவர் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இதனைத் தொடர்ந்து செல்வகுமார் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டு உள்ளார் என்ற தகவலும் போலீசுக்குக் கிடைத்து உள்ளது. இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செல்வக்குமாரைத் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், செல்வக்குமார் மீது எல்.ஓ.சி போடப்பட்டது.
எல்.ஓ.சி அல்லது லுக் அவுட் சுற்றறிக்கை (Look Out Circular) என்பது இந்தியாவில் பயணம் செய்யும் நபர் காவல் துறையால் தேடப்படுகிறாரா என்பதைச் சரிபார்க்க அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் ஒரு சுற்றறிக்கை ஆகும். இந்த நிலையில் நேற்று இரவு சென்னையிலிருந்து பிராங்க்பர்ட் செல்லும், லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், செல்வகுமார் பிராங்க்பர்ட் வழியாக அமெரிக்காவுக்குத் தப்பி செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்தார்.
சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், எல்லா பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வது போல், செல்வகுமாரின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது இவர் மதுரை மாவட்ட போலீசாரால், கடந்த ஓராண்டாகத் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது. இதை அடுத்து செல்வக்குமாரைப் பயணம் செய்ய அனுமதிக்காமல், அவருடைய பயணத்தைக் குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
அதோடு அவரை குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து மதுரை மாவட்ட தனிப்படை போலீசார், செல்வகுமாரை கைது செய்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க:நடுவானில் விமானத்தில் புகை பிடித்த பயணி கைது.. சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு!