சென்னை:மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா (13) எனும் சிறுமி, எஸ்.எல்.இ (Systemic lupus erythematosus) எனப்படும் இரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, இரு கால்களிலும் இரத்த ஓட்டம் தடைபட்டு, மிகுந்த வலியுடன் முன்பாதங்களும் கருத்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதனை சரி செய்ய முடியாத நிலையில் முதலமைச்சர் கவனத்திற்குச் சென்ற பிறகு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, அச்சிறுமிக்கு இரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, முடக்குவாதவியல் துறை மற்றும் சிறுநீரக மருத்துவத் துறை போன்ற பல்வேறு உயர்சிறப்பு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.
இரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அதனை சரிசெய்து, இருகால்காளின் முன்பாதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை காயங்களும் நன்றாக ஆறி, தற்போது வலி நன்கு குறைந்து நலமாக உள்ளார்.