சென்னை:நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் டிச.28ம் தேதி காலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி பேசுகையில், "கேப்டன் விஜயகாந்தை முதன்முதலாக நான் சந்தித்தது, ராஜ்பதிபவனில் அப்துல்கலாம் 11வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தென்னிய நடிகர் சங்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு அப்துல்கலாமை சந்திக்க வந்திருந்தார். அப்போது அப்துல்கலாம் விஜயகாந்துக்கு கிராமபுர தற்சார்பை எப்படி எய்துவது, புறா திட்டத்தை சினிமாவின் மூலமாக மக்களுக்கு எடுத்துச் செல்லுமாறும், அந்த புறா திட்டத்தை பற்றி விளக்கிக் கூறுமாறு தெரிவித்தார்.
அது தான் எங்களது முதல் சந்திப்பு. அடுத்து 2வது சந்திப்பு, விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நிற்கப்போவதற்கு முன்பாக கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் அறிக்கை தொடர்பாக சென்னை சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் சந்தித்தேன். விஜயகாந்த் திரையுலகத்தினுடைய பசியை ஆற்றியவர் என எல்லோரும் சொல்லுவார்கள். அன்று 3 மணி நேரம் விவாதித்துவிட்டு, நான் கிளம்புகிறேன் எனக் கூறியபோது, என்னோடு மதிய உணவு அருந்திவிட்டு தான் செல்ல வேண்டும் என இருக்க வைத்தார்.
ஒரு நாள் முழுவதும் அவர் பேசிய வார்த்தை திரையுலகில் மட்டும் நடித்தவர் அல்ல; ஏழை எளிய மக்களைப் பற்றி, பாட்டாளி மக்களைப் பற்றி பொதுவுடமை சித்தாந்தத்தைப் பற்றி சிந்திக்கக் கூடிய அற்புதமான மனிதர் என்றும், அவரது எளிமையான உள்ளத்தை, நேர்மையை, எதையும் எதிர்த்து போராட வேண்டும் என்ற வீரத்தை, விவேகத்தை புரிந்துகொண்டேன். அன்றிலிருந்தே விஜயகாந்துடன் எனக்கு நெருங்கிய பழக்கம்.