சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
மேலும் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை இடம்பெறச்செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதேபோன்று, இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இளைஞர்கள் இந்தி படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்குத் தகுதி பெறுவார்கள் எனவும், ஆட்சேர்ப்பிற்கான தேர்வின்போது, கட்டாயத்தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிக்கொள்கைகளுக்கு எதிரானவை என்றும், நமது தேசத்தின் பன்மொழிக்கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும்'எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 8ஆவது அட்டவணையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் உள்ளது.
இந்திய ஒன்றியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, இந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு, தனித்துவம், மொழிவழிப் பண்பாடு இருக்கிறது. இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது.
தமிழ் மட்டுமின்றி, அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து வலுவாகக்குரல் கொடுத்து வருகிறது. 1965ஆம் ஆண்டில் இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தாய்மொழியான தமிழைப்பாதுகாக்கவும் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் பல இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களுடைய உணர்வுகளை மதித்து, இந்திய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, "இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும்" என்று உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து, 1968 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில், அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதனடிப்படையில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, ஒன்றிய அரசுப்பணிகளில், ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலைப்பாடு தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் நீடிக்க வேண்டும்.