சென்னை: ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமன்றி, 225-க்கும் மேற்பட்ட பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் தயாராகும் மோர், லெஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். எனவே ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகிறது.
இருப்பினும், ஆவினின் முக்கியப் பொருளாக விற்பனையாவது பால் மற்றும் நெய்தான். இந்த நிலையில், நேற்று முதல் (செப்.14) ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆவின் நெய் லிட்டர் பாக்கெட் ரூ.620-ல் இருந்து ரூ.690-ஆகவும், ஜார் ரூ.630-ல் இருந்து ரூ.700-ஆகவும் ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், வெண்ணெய் 100 கிராம் ரூ.55-ல் இருந்து 60-ஆகவும், சமையல் வெண்ணெய் 500 கிராம் ரூ.260-ல் இருந்து 275-ஆகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் ரூ.275- ல் இருந்து, ரூ.280 என ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் சார்பில் அனுப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் மற்றும் கண்டங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆவின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.