சென்னை:சென்னையில் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் மூலம் 14 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம், பால் கொள்முதல் வரத்து குறைவு காரணமாக மாதவரம் மத்திய பால்பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு சுமார் 3 லட்சம் வரை பால் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று(மார்ச்.14) இரண்டாவது நாளாக ஆவின் பால் விநியோம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்கு ஆவின் வரத்து குறைந்துள்ளதால், தென் சென்னையின் பல பகுதிகளில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆவினில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். இந்த நிலையில் சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாதாந்திர அட்டைதாரர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களின் 63 விநியோக வாகனங்கள் மூலம் சுமார் 4 லட்சம் லிட்டருக்கும் மேல் தினசரி நடைபெற்று வரும் விநியோகமானது, ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை, பால் வரத்து குறைவு காரணமாக சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை 2வது நாளாக முடங்கியது.