சென்னை: 5 லிட்டர் ஆவின் பச்சை நிற நிலைபடுத்தப்பட்ட பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 5 லிட்டர் பால் 220 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதால் டீக்கடை மற்றும் உணவகங்களில் பால் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான ஆவின் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், தற்போது 5 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலையை பாக்கெட்டுக்கு பத்து ரூபாய் உயர்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை குறைப்பதாக சொல்லி லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைத்தது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்களின் விலையை மறைமுகமாக உயர்த்தியது. மேலும் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை இரண்டு ரூபாய் உயர்த்தி 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி திருவிழா: மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!
இதனைத் தொடர்ந்து நெய், வெண்ணெய், பால் பவுடர் விலையையும் உயர்த்திய நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தயிரின் விலையையும் லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தியது. மேலும், 170 கிராம் கொண்ட தயிர் பாக்கெட்டின் விலை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தயிர் பாக்கெட்டின் கொள்ளளவை 100 கிராமாக குறைத்து அதே பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இதனால் லிட்டருக்கு 40 ரூபாய் மறைமுகமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கால்நடை விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கடந்த ஆறு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது ஆவின் நிர்வாகம் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை மறைமுகமாக உயர்த்தியுள்ளது.
மேலும், 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை லிட்டர் பிங்க் நிற டயட் பாலுக்கு பதிலாக மஞ்சள் நிறத்தில் புதிய ரக ஆவின் பாலை அறிமுகம் செய்துள்ளது. 1.5 சதவீதம் கொழுப்புச் சத்தும், 9.0 சதவீதம் திடச் சத்தும் கொண்ட மஞ்சள் நிற பாலின் விலையை ஒரு ரூபாய் உயர்த்தி 19 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் ஆவின் நிறுவனம் திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:உலக யானைகள் தினம்: யானைகளை ஊருக்குள் புகாமல் தடுப்பது எப்படி?