சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கட்டுமான பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றம் ஓய்வு பெற்றவர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான சிறப்பு பொங்கல் பரிசு 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 குடும்பங்களுக்கு ஆவின் நெய் பாட்டில்கள் வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பால்வளத் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்படியும், அரசின் பால்வளத் துறை முதன்மை செயலர் மற்றும் பால்வளத் துறை ஆணையர், ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரிலும் ஆவின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட எட்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் 100 மி.லி. அளவு கொண்ட நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நுகர்வோர்களுக்கும் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பணி போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு, இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய் பாட்டில் மீது இது விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு 100 விழுக்காடு தரத்துடன் விநியோகம் செய்வதுடன் ஏதேனும் சேதம் இருப்பின் ஆவினின் அந்தந்த மண்டல அலுவலரின் அனுமதியுடன் மாற்றி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பொங்கல் பரிசு தருவது யார் அரசா, அதிமுகவா... குழம்பும் பொதுமக்கள்