சென்னை: தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், தினமும் 40 லட்சம் லிட்டருக்கும் மேல் பாலை கொள்முதல் செய்து, அதனை கொழுப்புச்சத்து அடிப்படையில் பிரித்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.
அண்மையில் ஆவின்பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கும், சிவப்பு நிறப் பால் பாக்கெட்டின் விலை 60 ரூபாயிலிருந்து 76 ரூபாய்க்கும் உயர்த்தப்பட்டது. அதேநேரத்தில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டைப் பொறுத்தவரை, தினசரி சுமார் 6 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஒரு லட்சம் லிட்டர் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வுக்குப் பிறகு, மாதாந்திர அட்டைதாரர்கள் இணைப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி, வணிக ரீதியாக விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது.