சென்னை:ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூபாய் 2,438 கோடி மோசடி செய்த வழக்கில் இயக்குனர்கள் உட்பட 21 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் இயக்குனரில் ஒருவரான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(37) என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில்குமார், தினமும் காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் செந்தில்குமார் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு கோயம்பேடு சேமாத்தம்மன் செக்டர் தெருவில் அமைந்துள்ள அவரது உறவினர் முருகன் என்பவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று செந்தில்குமாரை தாக்கி கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட உறவினர் முருகன் உடனடியாக செந்தில்குமாரின் மனைவி சரண்யாவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் செந்தில்குமாரின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது, அதில் பேசிய நபர்கள் தங்களது இழப்பீடு தொகையாக 15 லட்ச ரூபாய் தர வேண்டும் என மிரட்டி உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் மனைவி தனது நகையை விற்று 1 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார். உடனடியாக அந்த கும்பல் மீனாட்சி மருத்துவமனை அருகே பணத்தை கொண்டு வருமாறு சொல்லியிருக்கின்றனர். அதன்படி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் செந்தில்குமாரின் தாயார் கலா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செந்தில்குமாரின் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.