சென்னை:ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 30,000 வட்டி வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி, ஆயிரக்கணக்கான நபர்கள் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பாக, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்தின் நிர்வாகி இருவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகருக்கு, வருவாய்த்துறை மூலம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமின் வழங்கப்பட்டது.
மேலும் சுமார் 1,600 கோடி ரூபாய் பொதுமக்களால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பணத்தை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள் என்ற விவரங்களை மனுவாக கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி முதலீட்டாளர்கள், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு முதலீட்டாளர்களில் 1,500 பேருக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், சுமார் 30 வருவாய் துறை அலுவலர்கள் ஆர்டிஓ தலைமையில் ராஜரத்தினம் மைதானத்திற்கு வந்து, புகார்தாரர்களிடம் மனுவைப் பெற்று பதிவு செய்து டோக்கன் வழங்கி வருகின்றனர்.
அதேநேரம், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2,500 க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் திரண்டு வந்ததால் வருவாய் துறை அலுவலர்களாலும், காவல்துறை அலுவலர்களாலும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து காலையில் இருந்தே தங்களுக்கு டோக்கன் கொடுக்காமல் அலைக்கழிப்பதாக, அதில் ஒரு பகுதியினர் ராஜரத்தினம் மைதானம் எதிரே உள்ள டாக்டர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.