சென்னை: ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி, ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி மோசடி செய்தது. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் பாஸ்கர், மோகன்பாபு, உஷா, ஹரீஷ், செந்தில்குமார், ராஜசேகர், பட்டாபி ராமன் மற்றும் மைக்கேல் ராஜ் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிறுவனத்திலிருந்து 3.41 கோடி ரூபாய் பணம், 60 சவரன் நகைகள், 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இயக்குனர்கள் பாஸ்கர் மற்றும் மோகன்பாபு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். , ஆருத்ரா கோல்டு கம்பெனிக்குச் சொந்தமான 81 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.
இதனிடையே தலைமறைவான மீதமுள்ள இயக்குனர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், முக்கிய நிர்வாகி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் இன்று (ஜூலை 5) சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனம் முன்பு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தர வேண்டும். 1 லட்சம் ரூபாய்க்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக பேருந்து உள்ளிட்ட பல இடங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செய்த விளம்பரத்தை நம்பி கடன் வாங்கி முதலீடு செய்தோம். அவர்களும் கூறியபடி மாதந்தோறும் வட்டியாக ரூ.30,000 மற்றும் 2 தங்க நாணயம் கொடுத்தனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்! சில தவணைகளில் ஆட்களை சேர்த்துவிட்டால், கமிஷனாக ரூ.5,000 தருவதாக ஆருத்ரா நிறுவனம் கூறியதை நம்பி பலரை சேர்த்துவிட்டோம். அதிக பணம் சேர்ந்த பிறகு, ஆருத்ரா நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. பணத்திற்கான எந்த வித பதிலையும் நிறுவனம் கூறவில்லை. நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம்” என தெரிவித்தனர்.
இதனிடையே தலைமறைவான இயக்குனர் ராஜசேகர், வாடிக்கையாளர்கள் இருக்கக்கூடிய வாட்ஸ் ஆப் குழுவில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாடிக்கையாளர்கள் யாரும் புகார் அளிக்க வேண்டாம். கூடிய விரைவில் வாடிக்கையாளர்களின் பணம் கொடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:விமானத்தில் வந்து தொடர் திருட்டு; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது