சென்னை:சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வெளியேறும் பகுதி ஆறாவது வாசல் அருகே குப்பைத்தொட்டி இருக்கும் இடத்தில் இன்று (செப்.1) காலை குவியல் குவியலாக கிடந்த ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகளை சில பயணிகள் எடுத்து பார்த்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பிற்காக நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதை தடுத்தனர். இவைகளை விமான நிலைய ஊழியர்கள் தான் இங்கு கொட்டி இருக்கின்றனர் எனவும், அவர்கள் வந்து அள்ளி சென்று விடுவார்கள் என்றும் கூறி உள்ளனர்.
மேலும், முக்கியத்துவம் வாய்ந்த ஆதார், பான் கார்டுகள் மற்றும் பயணிகளின் பாஸ்போர்ட்கள் கேட்பாரற்று பொது இடங்களில் கிடந்தால் அதைக் கண்டெடுப்பவர்கள், அருகே உள்ள தபால் பெட்டிகளில் போட்டு விட வேண்டும். இல்லையேல் அருகே உள்ள அஞ்சல் நிலையங்களில் ஒப்படைத்து விட வேண்டும் என்பது அரசின் பொதுவான விதிமுறையாகும்.
அஞ்சல் துறையினர், அந்த கார்டுகளில் உள்ள முகவரிகளுக்கு, அஞ்சல் துறை தங்களது செலவில் அனுப்பி வைத்து விடும். இந்த நடைமுறை இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையத்தில் குவியலாக ஆதார் மற்றும் பான் கார்டுகள் விமான நிலைய குப்பைத்தொட்டி அருகில் கொட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், பயணிகள் கொண்டு வரும் ஆதார் கார்டுகளை, சிலர் தவறுதலாக விட்டு செல்கின்றனர். சில பயணிகளின் கைகளில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகின்றன.