சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவர், தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அரிசி வாங்க சென்றார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அரும்பாக்கம் காவல் துறையினர், அவரை இடைமறித்து விசாரித்தபோது அரிசி வாங்க செல்வதாகக் கூறியுள்ளார். அதற்கு காவல் துறையினர் அவரது வீட்டு முகவரியை கேட்டு, உங்களது வீட்டின் பக்கத்திலேயே கடை இருக்கிறது அங்கேயே வாங்கி கொள்ளலாமே, முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே வரலாமா என்று எனக் கேட்டதாக தெரிகிறது.
மேலும், அவரது வாகனத்தில் காவல் துறை என ஸ்டிக்கர் ஒட்டியதைக் கண்டு விசாரித்தபோது, சதாம் உசேன் காவல் துறை இல்லை என்பது தெரியவந்தது. இதனால், முழு ஊரடங்கை மீறியதற்காக அவரது இருசக்கர வாகனத்தை அரும்பாக்கம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், சதாம் உசேன் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யவிடாமல் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.