சென்னை: இந்தியா முழுவதும் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato), டன்சோ (Dunzo) உட்பட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை உணவு டெலிவரி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட வீட்டிற்குth தேவையான பொருட்கள் அனைத்தையும் டெலிவரி செய்யும் சேவை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் டெலிவரி ஊழியர்கள் தற்போது நூதன முறையில் மோசடி செய்வதாக வாடிக்கையாளர் வினய் என்பவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சொமெட்டோ தலைமைச் செயல் அதிகாரிகளை டேக் செய்து புகாரளித்துள்ளார்.
அதில், சொமேட்டோவில் 800 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யும்போது, அதற்கு கேஷ் ஆன் டெலிவரி என்ற வசதியை பயன்படுத்தி ஆர்டர் செய்யுமாறு கூறுவதாகத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இந்த முறையில் டெலிவரி ஆர்டர் செய்தால், டெலிவரி ஊழியரோ அல்லது வாடிக்கையாளரும் காரணங்கள் சிலவற்றைக் கூறி ஆர்டரை கேன்சல் செய்து, கேன்சல் செய்யப்பட்ட உணவு அல்லது பொருட்களைப் பாதி விலைக்கு டெலிவரி ஊழியர் விற்பனை செய்து விட்டு போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் டெலிவரி நிறுவனத்திற்கு மட்டுமே நஷ்டம் ஏற்படும் எனவும் டெலிவரி ஊழியருக்கும், வாடிக்கையாளருக்கும் லாபம் ஏற்படும் வகையில் இந்த மோசடி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து டெலிவரி ஊழியர்கள் சிலரிடம் விசாரித்த போது, சுமார் 500 ரூபாய்க்கு மேல் உணவு அல்லது மளிகை பொருட்கள் ஆர்டர் செய்வார்கள் எனவும் அவர்கள் தெரிவித்த முகவரிக்கு முன்பாகவே சென்று, வாடிக்கையாளரின் எண்ணை வேறொரு எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு டீல் பேசுவதாகவும் டெலிவரி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நீங்கள் ஆர்டர் செய்த பணத்தைவிட பாதி அளவு அல்லது அதற்குக் குறைவாகவும் தங்களுக்குக் கொடுத்தால் ஆர்டர் செய்த பொருட்களையும் கொடுத்துவிட்டு சென்று விடுவோம். உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என வாடிக்கையாளரையே தங்கள் மோசடிக்கு உடந்தையாக்கி பணத்தை மோசடி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கேன்சல் ஆனாலும் ஆர்டர் செய்யப்பட்ட பொருளின் மதிப்பை டெலிவரி ஊழியர்கள் சம்பளத்திலிருந்து பிடிக்க மாட்டார்கள் எனவும் மேலும் டெலிவரி ஊழியர்களுக்கு போட வேண்டிய கமிஷன் தொகையும் தவறாமல் கொடுத்து விடுவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.