சென்னை: தலைநகரில் சென்னை 2.0 திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி சார்பில் முக்கிய சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படாததால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சென்னை தியாகராய நகர் பகுதியில் மரம் திடீரென முறிந்து அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது விழுந்த விபத்தில் பெண் அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தியாகராய நகர், டாக்டர் நரசிம்மன் சாலையில் ஆட்டோவில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்த பொழுது, ஜெய் அடுக்குமாடி குடியிருப்பு அருகே இருந்த சுமார் 30 வருட பழமையான மரம் திடீரென சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. மேலும் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆட்டோவில் சிக்கியிருந்த இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். இதில் ஆட்டோ ஓட்டி வந்த சேகர் என்பவர் லேசான காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஆனால் மரத்தின் பெரிய அளவிலான பகுதி உள்ளே அமர்ந்து இருந்த பெண் மீது விழுந்ததால் அவர் படுகாயம் அடைந்தார். மேலும், ஆட்டோவிற்கும் மரத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டு அவரை வெளியே எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனை அடுத்து அந்த பகுதிக்கு ராட்சச கிரேன் கொண்டு வரப்பட்டு மரத்தை தூக்கி ஆட்டோவில் இருந்த பெண்ணை மீட்டனர்.
பின்னர் படுகாயமடைந்த அந்த பெண்ணை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து தொடர்பாக நடத்திய விசாரணையில், இறந்த பெண்ணின் பெயர் சூர்யா, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கணக்காளராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியை சேர்ந்த சூர்யா, கணவர் குழந்தையுடன் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மரம் இருந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் மரத்தின் வேர் செல்வதால் அந்த வேரை அறுப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் முயற்சி செய்ததாகவும், அதனால் வேறு பலவீனமடைந்து மரம் சரிந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது - பீகார் உயர்மட்ட குழு