சென்னை: சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்குச் சென்று உள்ளார். அவருக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள கதிரியக்கவியல் மையத்திற்கு அந்த இளம் பெண் ஸ்கேன் எடுப்பதற்குச் சென்றதாகவும், அங்கு முதுகலை மருத்துவர் கோகுல கிருஷ்ணன் அந்த பெண் நோயாளியிடம் ஸ்கேன் எடுப்பதற்காக ஆடையைக் கழட்டச் சொல்லியதாகவும், அதனைத் தொடர்ந்து பாலியல் ரீதியாக வன்முறை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மருத்துவக் குழு விசாரணை செய்து, கதிரியக்கவியல் மருத்துவர் கோகுல கிருஷ்ணனை 2 வாரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.