தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது.
இந்நிலையில் கரோனா தொற்று சமூக தொற்றாக மாறிவிட்டதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்தத் தொற்று சமூக தொற்றாக மாறிவிட்டதா என்று கண்டுபிடிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கோவை , சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. இந்நிலையில் கரோனா குறித்து சுவாதி பிரபாகரன் எனும் பெண், சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டதாவது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது தாயை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு புற நோயாளிகள் பிரிவில் 30 பேர் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், அவரது தாய்க்கு வெப்பநிலை சோதனை செய்ததில் கரோனா தொற்று தொடக்கம் என்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறி அனுப்பியுள்ளனர். மேலும், மாநகராட்சி கூறிய விதிமுறைகளை கூறிவிட்டு பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவைத்தனர். அந்த மருத்துவமனையில் அதிக மருத்துவர்களுக்கு தொற்று இருப்பதாகவும், அவர்கள் பரிசோதனை செய்வதில்லை என்பதையும் கேட்ட அந்தப் பெண்மணி அதிர்ச்சியில் உரைந்துள்ளார்.