பணமோசடி செய்ததாக முன்னாள் பாஜக நிர்வாகி மீது புகார் சென்னை: விம்கோ நகர் அடுத்த மணலி புது நகரைச் சேர்ந்தவர் வளர்மதி (30). இவர் மணலி புது நகரில் பாஜகவின் 16வது வட்ட மகளிர் அணி பொருளாளராக இருந்துள்ளார். அப்போது இவருக்கு முன்னாள் பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாஸ்கர் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
அவர் வளர்மதியிடம், போரூர் பகுதியில் தனக்கு பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா கடைக்கு புதிதாக உரிமம் வாங்கித் தருவதாகக் கூறி, 25 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், பணத்தை பெற்றுக் கொண்ட பொன் பாஸ்கர், அவரது நண்பர் அருண்குமார் பெயரில் ஒப்பந்தம் தயார் செய்ததாக வளர்மதி குற்றம் சாட்டுகின்றார்.
மேலும், இது குறித்து வளர்மதி கேள்வி எழுப்பியதற்கு, பொன் பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களான முத்துராஜ், செந்தில்குமார், பாஸ்கரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வளர்மதியை மிரட்டியதாக புகார் அளிக்கும் வளர்மதி, தன்னுடைய காரையும் பொன் பாஸ்கர் மற்றும் அவருடைய நண்பர்கள் பறித்துச் சென்றதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொன் பாஸ்கர் மற்றும் வளர்மதி இடையே நடைபெற்ற தகராறு காரணமாக, வளர்மதி நடத்தி வந்த பியூட்டி பார்லர் மூடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து பொன் பாஸ்கர், முத்துராஜ் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், வளர்மதியிடம் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா கடைக்கு புதிதாக உரிமம் வாங்கி தருவதாகக் கூறி வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இருந்ததால் வளர்மதி, பொன் பாஸ்கரிடம் பணத்தைத் திருப்பி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொன் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள், தன்னை கொலை செய்ய முயல்வதாக வளர்மதி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், வளர்மதி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்க வந்துள்ளார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா கடைக்கு புதிதாக உரிமம் வாங்கி தருவதாகக் கூறி, பொன் பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் ஆன்லைன் மற்றும் ரொக்கமாக என மொத்தம் 25 லட்சம் பெற்று ஏமாற்றி விட்டனர்.
இ துகுறித்து பாஜக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. அவரும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் சரிவர விசாரணை மேற்கொள்வதில்லை. எனது இறுதி நம்பிக்கையாக, தற்போது ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க:ரயிலில் வாலிபரை கத்தியால் குத்திய சமோசா வியாபாரி முதல் 3 பேர் கைது வரை - சென்னை குற்ற செய்திகள்!