சென்னை:தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதேபோன்று, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவு மண்டபங்களில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், பெரியார் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் சென்னை சிஐடி காலனியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டில் உள்ள அவரது புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கேக் வெட்டி கொண்டாடிய ஸ்டாலின்:பிறந்த நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மேலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வேல்முருகன், வைகோ, கே.எஸ். அழகிரி, தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மஞ்ச பையில் மரக்கன்று: பசுமையை வளர்க்கும் நோக்கில் மஞ்சப்பையில் மரக்கன்றுகளை தொண்டர்களுக்கு ஸ்டாலின் வழங்கினார். மேலும், ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் ஷா என்பவர் ஸ்டாலினுக்கு ஒட்டகத்தைப் பரிசாக அளிக்க, ஒட்டகத்துடன் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து, ஒட்டகத்தைப் பரிசளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து பல்வேறு கட்சிகள் சார்பில் எதிர்ப்பு இருந்தபோதிலும், அதனை செயல்படுத்த திமுக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுக்கு பேனா சின்னத்தை பரிசாக திமுக தொண்டர் ஒருவர் வழங்கினார்.