சென்னை:மறைமலைநகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 22). இவர் அடையாற்றில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கிண்டியிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் 78 எண் கொண்ட பேருந்தில் பயணம் செய்து உள்ளார். அப்போது சின்ன மலை பேருந்து நிலையம் அருகே பேருந்தானது சென்ற போது டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டு வந்து உள்ளனர்.
அப்போது தினேஷிடம் டிக்கெட்டை பரிசோதித்த போது இல்லாததால், அவரிடம் டிக்கெட் குறித்துக் கேட்டு உள்ளனர். அதற்குத் தான் முந்தைய பேருந்து நிறுத்தத்தில் ஏறியதாகவும், பேருந்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருந்ததால் இடையில் நின்று இருந்த பயணிகளிடம் பணத்தைக் கொடுத்து டிக்கெட் எடுக்க கூறியிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஆனால் இதனைச் சற்றும் காதில் வாங்காத டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தினேஷை இழுத்து பேருந்தை விட்டு கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கி உள்ளனர். மேலும் சக பயணிகள் கூறியும் கேட்காத பரிசோதகர் தினேஷை தகாத வார்த்தையால் பேசி செல்போன் மற்றும் உடைமைகளைப் பறித்து உள்ளனர். இதை அடுத்து சக பயணிகள் பரிசோதகரைத் தடுத்து நிறுத்தி தினேஷை மீட்டு உள்ளனர்.