சென்னை: ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம், மாதம் 12 ஆயிரம் என கவர்ச்சிக்கரமான திட்டங்களை அறிவித்த நிறுவனம் ஏஆர்டி ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தை ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இவர்களின் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் லட்சங்களில் முதலீடு செய்தனர்.
பொதுமக்களின் முதலீடு பணத்தில் ஏஆர்டி மால், ஜூவல்லர்ஸ் என நாடு முழுவதும் தங்களின் கிளைகளை விரிவுபடுத்திய ஏஆர்டி நிறுவனம். சில மாதங்கள் வட்டியை வாரி வழங்கிவிட்டு அதன் பிறகு வட்டியும், அசலும் தராமல் பொதுமக்களை ஏமாற்றியது. இதனால் பாதிக்கப்பட்டோர் ஆயிரத்து 760 பேர், மொத்தம் 26 கோடி ரூபாய் இழந்துவிட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏஆர்டி மால், நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி பல லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராபின் மற்றும் ஆல்வின் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உரிமையாளர்கள் ராபின் மற்றும் ஆல்வினை நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.