சென்னை மேற்கு மாம்பலம் ராஜீவ் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி(66). இவர்களது மகள் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் சொந்த வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வாஷிங் மெஷின் பழுதடைந்ததால் அதனை சரிசெய்ய ஆட்களை அழைத்து வருவதற்காக நேற்று (பிப்.17) வெங்கடேசன் வெளியே சென்றுள்ளார்.
அவர் சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பத்மாவதியிடம் தான் பிளம்பர் என்றும், சமையலறையில் உள்ள குழாயை சரிசெய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பத்மாவதி குழாய் சரியாக இருக்கிறது, வாஷிங் மெஷின் சரிசெய்ய வேண்டும் என்று வீட்டினுள் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர், அந்த நபர் வீட்டில் குழாய் மற்றும் வாஷிங் மெஷினை பார்த்து விட்டு இதற்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது என கூறியதுடன் உங்க வீட்டு கதவு கூட சரியாக இல்லை என்று தெரிவிக்கவே உடனே பத்மாவதி அனைத்து கதவுகளையும் சரிபார்க்கும்படி சொல்லியுள்ளார்.